×

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸ்சுக்கு நிரந்தர தடை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், பதிலளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் தாமதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கில் இரு தரப்பும் வாதிட அனுமதியளித்தார். அதன்படி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12ம் தேதி நிறைவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இந்த மனுக்களில் நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் அளித்த தீர்ப்பில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை மற்றொரு கட்சி பயன்படுத்த முடியாது. அதிமுகவின் கட்சி விதிகளில் கொடி குறித்து விவரிக்கப்பட்டுள்ளதால், எந்த கொடியை பயன்படுத்தக் கூடாது என பழனிசாமி குறிப்பிடவில்லை என்கிற பன்னீர்செல்வத்தின் வாதத்தை ஏற்கமுடியாது. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்த வழக்குகளில் எந்த நீதிமன்றமும் நீக்கம் செல்லுபடியாகாது என சொல்லாதபோது, கட்சியில் தொடர்வதாக கூறி அதிமுகவின் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்த முடியாது. பன்னீர் செல்வத்தின் நீக்கம் செல்லாது என்று ஏதாவது ஒரு நீதிமன்றம் அறிவிக்கும் வரை, அதிமுக பொது செயலாளரின் பணிகளில் அவர் தலையிட முடியாது. நீக்கத்தை எதிர்த்த பிரதான உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளதற்காக கட்சியில் நீடிப்பதாகவோ, ஒருங்கிணைப்பாளர் என்றோ கூறிக்கொள்ள முடியாது.

அவரது ஆதரவாளர்களின் அல்லது புதிதாக கட்சியை தொடங்கினால் அதன் ஒருங்கிணைப்பாளர் என பன்னீர்செல்வம் கூறிக்கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என கூறக்கொள்ள முடியாது.
அதிமுகவின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பணிகளில் தலையிடவோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதித்தால் அரசியல் அரங்கிலும், தொண்டர்கள் மத்தியிலும் தீவிரமான குழப்பத்தை ஏற்படுத்தும். அதிமுக பொதுச் செயலாளரின் நடவடிக்கைகளில் தலையிடுவது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிக் கொள்வது, கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தவது போன்ற ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

The post அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸ்சுக்கு நிரந்தர தடை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Chennai High Court ,O. Panneerselvam ,High Court ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18...